Thursday, January 29, 2015

காக்கை உட்கார பனங்காய் விழுந்த கதை

ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணம் இனிதே முடிந்தது. இது இந்தியாவிற்கு வெற்றியா தோல்வியா என்பதைவிடமோடியின் animatic/drama விஷயங்கள்தான் எல்லா சோசியல் மீடியாக்களிலும் வியாபித்திருக்கின்றன.

நமக்கு இந்த சந்திப்பின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் எதுவுமே தெரியாது என்றாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்த்தல் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்தமுறை நாம் அவர்களிடம் கையேந்தவில்லை. மாறாக கைகுலுக்கினோம்.

ஒருவழியாக அணுசக்தி ஒப்பந்தம் முடிந்துவிட்டது. ஆனால் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்பதில் என்ன உடன்பாடு எட்டப்பட்டது என்பதில் தெளிவில்லை.

சில முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெளுத்திடப்படுள்ளன. பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வர இவை உதவலாம்.

இதற்கு மோடி என்கிற மந்திரம் தான் காரணம் என்ற பிஜேபி'ன் வாதத்தில் எந்த உண்மையும் இல்லை. காரணம் இந்தியாவின் ராணுவ பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியம் போல தோன்றுகிறது. காக்கை உட்கார பனங்காய் விழுந்த கதை தான் இது.

சீனாவின் வளர்ச்சி, அரபு வசந்தம், ரஷ்யா என அமெரிக்காவிற்கு பல நெருக்கடிகள் உள்ளன. ரஷ்யாவையும் அரபு நாடுகளையும் கட்டுப்படுத்தவே திட்டமிட்டு பெட்ரோல் டீஸல் விலையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குறைத்தன. அதன் தாக்கம் ரஷ்யாவில் மிக நன்றாகவே தெரிகிறது.

ஆப்கானில் உள்ள இயற்கை வளங்களை அள்ளிசெல்ல அமெரிக்கா போட்ட திட்டங்கள் வெற்றிபெறவில்லை. இருந்தாலும் அதன் ஒரு கால் இன்னும் அங்குதான் உள்ளது. கருங்கடல் மார்க்கத்தில் அமெரிக்காவின் வழி முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டது. வான்வழி உட்பட.

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கும் சீனா ஆப்பு வைத்துவிட்டது. கவ்தர் (gwadar port) துறைமுகமும் சீனாவின் வசமே. அமெரிக்காவின் அடுத்த இலக்கு குஜராத்தின் கண்டல (kandla port) போர்ட் (இங்கிருந்து சுதந்திர காஷ்மீரின் வழியாக ஆப்கானை அடைவது).

சீனாவோ மிகக்குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்து மிக அதிக டாலர்களை கைவசம் வைத்துள்ளது. அது மேற்கத்திய நாடுகளை மிரட்டுகிறது. சீனா நினைத்தால் ஒரேநாளில் உலகின் 14 முக்கிய வங்கிகளை முடக்கமுடியும். 10 மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை செயலிழக்க செய்யமுடியம்.

அமெரிக்கா அஞ்சுகிறது. தானாக முன்வந்து நம்முடன் கைகோர்க்க தயாராகிறது.

அடுத்தமுறை மோடிக்கு ஒபாமா டீ போட்டு கொடுப்பார் என நம்பலாம்.

Saturday, January 10, 2015

கடவுள் வந்திருக்கிறார்

நான் எழுந்திருக்கும் போதே ஜெபியும் பாலாவும்  கிளம்ப தயாராகி இருந்தனர். மணி ஒன்பதுக்குமேல் இருக்கும்.

அண்ணா ஒரு 5 மினிட்ஸ்... நானும் வரேன் என்றேன்.

நீ கெளம்பி வரதுக்குள்ள கோவிலே சாத்தியிருவாங்க. நாங்க கெளம்பறோம் என்றார் ஜெபி.

பாலாவிடம் கண்ணடித்துவிட்டு குளிக்க பாத்ரூமிற்குள் சென்றேன்.

இன்று ஜனவரி ஒன்று என்பதால் நேற்றிரவு நன்றாக தூக்கமில்லை.

கோரமங்களா ப்போரம் மால் என சுற்றிவிட்டு வீடு திரும்புவதற்கு மணி மூன்றுக்குமேல் ஆகிவிட்டது. படுத்த உடனேயே பக்கத்துக்கு அப்பார்ட்மெண்டில் இருந்து ஒருவன் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும்   போலீஸ் வந்திருப்பதாகவும் சொன்னதால் உடனே பார்க்க சென்றுவிட்டதால் சுத்தமாக தூங்கவே  இல்லை.

வேகவேகமாக கிளம்பி கோவிலுக்கு சென்றோம். முன்பே பெரிய கியு நின்றிருந்தது. வைகுண்ட ஏகாதேசி என்பதால் கொஞ்சம் அதிக கூட்டம். ஒரு போலீஸ்காரர் கூட்டத்தை வரிசைப்படுத்திகொண்டிருந்தார்.

 என்னக்கு கடவுள் நம்பிக்கை பெரிதாக இல்லையென்றாலும் இதுபோன்ற விசேச நாட்களில் தவறாமல் கோவிலுக்கு சென்றுவிடுவது வழக்கம். பெங்களூரில் உள்ள கோவில்களில் உள்ள சிறப்பே அங்கு அனைத்து மாநில பெண்களும் வருவார்கள் என்பதே. அதனால் நான் கடவுளை அதிகம் கண்டுகொள்வதில்லை.

என்னக்கு முன்னால் கியு  ஒரு வயதான அம்மா கையில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் நின்றது அந்த குழந்தையின் தாயக இருக்கவேண்டும்.

அவள கொஞ்சம் கீழ ஏறக்கிவிடுமா. எவ்வளவு நேரம் தூக்கீடே நிப்பே என்று கடிந்துகொண்டிருந்தார்.

என் செல்லம் கீழ எறங்காது. ஏண்டா குட்டி. கொஞ்சிக்கொண்டிருந்தர் அந்த அம்மா.

கோவிலுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டது. கூடவே கோவிந்தா கோவிந்தா என்ற கோசமும். தரிசனம் முடித்து வெளியே வரும் அனைவர் முகத்திலும் ஒரு சந்தோஷம். இந்த புது வருடம் மிகச்சிறப்பாக இருக்கு என்ற நம்பிக்கை.

எத்தனை மனிதர்கள். அவரவர்களின் வாழ்க்கை கஷ்ட நஷ்டங்கள். நம்முடைய பிரச்சனைகள் சக மனிதனால் தீர்க்கமுடியாது என்கிறபோது கடவுள் அல்லது கடவுள் என்கிற நம்பிக்கை தேவையாய் இருக்கின்றது.

சாமி சிலையை நெருங்க நெருங்க அந்த குழந்தை பாட்டியிடம் ஏதோ கேட்டுகொண்டே வந்தது. குழந்தையின் அம்மா குழந்தையை திட்டிகொண்டே இருந்தார்.

நான் கொஞ்சம் கிட்ட நெருங்கி நின்றுகொண்டேன்.

அம்மாயி அம்மாயி சொல்லு. இன்னைக்கு எதுக்கு கோயிலுக்கு வந்திருக்கோம். அன்னைக்கு தான வந்தோம். 

இன்னைக்கு வைகுண்ட ஏகதேசி மா செல்லம். இன்னைக்கு கோவிலுக்கு வந்த சாமி நம்ம கூடவே வீட்டுக்குவரும். நல்ல சாமி கும்பிடு தங்கம்.

அவர்கள் மிக சிரத்தையாக சாமி கும்பிட்டனர். நானும் சாமி கும்பிட்டேன். ஆனாலும் மனம் வெளியில் கொடுக்கப்படும் பொங்கலையே நினைத்திருந்தது.

பொங்கலும் கையுமாக கோவிலுக்கு வெளியே ஜெபியும் பாலாவும்  வரட்டுமென காத்திருந்தேன்.
பாட்டி குழந்தையுடன் வெளியே வந்தார். குழந்தை மீண்டும் கேட்டது.

அம்மாயி சாமி வருமா.

ஆமாட தங்கம். சாமி கண்ணுக்கு தெரியாது. ஆனா கூடவே வரும்.

கிளம்ப ஆரம்பித்தவர் மீண்டும் இரண்டடி பின்னே வந்து கோவிலைப்பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டார். குழந்தையும் கூட.

அவர்கள் கிளம்பி சென்றனர். குழந்தை கோவிலை பார்த்தபடியே பாட்டியின் தோளில் சாய்ந்திருந்தது.

நானும் எல்லாப்புறமும் தேடினேன். கடவுள் வந்திருக்கவில்லை.

வந்திருக்கலாம்!!!