Sunday, February 1, 2015

சாமமேடு

கொண்டக்கருப்பன் கொலை நடந்து நான்கு நாள்கள் ஆகிவிட்டது. அவன் சாமமேட்டில் கொலைசெய்யப்பட்டு கிடந்த விசயத்தைபற்றிதான் ஊர்முழுக்க பேச்சாகயிருந்தது.

கொண்டக்கருப்பன் தாளக்கரையில் பெரிய ராவுடியாக இருந்தவன். ஊருக்குள் அவனை எதிர்க்கும் ஒரே ஆள் வாத்தியார் மகன் மட்டுமே. ஆனாலும் அவனுக்கு குடும்பம், சொந்தபந்தம் ஏதும் இல்லை.

கண்ணப்பன் இரண்டு நாட்களாக பசி தூக்கம் அற்றவாரக அலைந்துகொண்டிருந்தார். கொண்டக்கருப்பன் கொலைசெய்யப்பட்ட இடத்திக்கு அருகில்தான் இவரது காடும் இருக்கிறது.

கொலை நடந்த அன்று கண்ணப்பன் வேட்டைக்கு சென்றிருந்தார். மணி அதிகாலை மூன்றுக்கு மேல் இருக்கும். இவர் டாங்கி மேட்டை தாண்டி வரும்பொழுதுதான் ஒரு முயல் கண்ணுக்கு தட்டுப்பட்டது. ரோட்டைத்தண்டி வந்து ஆளாம்பளத்தார் காட்டுக்குள் ஓடிய முயலை தொரத்தி கம்பிவலையை வீசி பிடிப்பதற்குள் இவருக்கு மூச்சுமூட்டியது.

குடிக்க தண்ணீர் இருக்குமா என்று தேடியபோதுதான் மணல் வண்டி கண்ணில் பட்டது. எருதுகள் பூட்டியிருந்தது. அவை அமைதியாக அசைபோடுக்கொண்டிருந்தன. மணலில் இருந்து தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு முன்புதான் மணல் ஏற்றியிருக்க வேண்டும். வண்டி யாருடையதென்பது பூட்டியிருக்கும் எருதுகளை பார்த்ததுமே தெரிந்தது. லைட்டை அங்கும் இங்கும் அடித்துப்பர்த்தார். யாரையும் காணவில்லை.

இங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழி இவருக்கு பழகியது என்பதால் லைட்டை அடிக்காமலையே நடந்தார். லைட்டை கண்டால் பக்கத்து பட்டிநாய்கள் வேறு ஊளையிட ஆரம்பிக்கும்.

இவர் சாமமேட்டில் ஏறியபோது கிழக்கில் இருந்து கொண்டக்கருப்பன் பாடிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது. அவன் போதையில் இருப்பது அவன் குரலிலயே தெரிந்தது. அவனிடம் பேச்சு கொடுத்தால் விடிந்துவிடும் என்பதால் இவர் கடவுத்தரம்பை நீக்கி காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தார். சென்றவர் முயலை இங்கேயே உரித்துவிட முடிவுசெய்து அங்கேயே உட்கார்ந்து உரிக்க ஆரம்பித்தார்.

தீடிரென்று யாரோ ஓடும் சத்தம் கேட்டது. எழுந்து பார்பதற்குள் "அய்யோ" என்ற சத்தம் பீறிட்டது.

"எவன் வீட்டு கதவ எவன்டா தற்றது? சாவுட என ***** மவனே" என்ற குரல் மட்டும் கேட்டது.

மங்கலான வெளிச்சத்தில் எதுவும் சரியாக தெரியவில்லை. இவர் நகராமல் திடிக்கிற்று நின்றபடியிருந்தார்.

அய்யோ அய்யோ என்ற மரணவலியின் குரல் மட்டும் மாறி மாறி கேட்டது. இவர் கைகள் முன்னமே நடுங்க ஆரம்பித்திருந்தன. பதட்டம் கூடியிருந்தது.

 சில நிமடங்களில் எல்லாம் முடிந்துபோயிருந்தது. ஒருவன் மட்டும் வேகமாக ஓடினான். சிறிது தூரத்தில் முட்புதறில் கிடந்த சைக்கிளை எடுப்பதுபோல் சத்தம் கேட்டது. சைக்கிள் வேகமாக சென்றது. நிலவின் சிறு ஒளியில் நடந்தது எல்லாம் ஒரு கனவு போல் இருந்தது.

இவர் தயங்கித்தயங்கி வேலியோரம் சென்று எட்டிப்பார்த்தார். கொண்டக்கருப்பனின் சரீரம் சரிந்து கிடந்தது. இரத்த வாடை வீசியது. இருட்டில் குத்துப்பட்ட இடங்கள் சரியாகத்தெரியவில்லை. பாதி உரித்த முயலை கையில் பிடித்தவாறு வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

விடிந்ததும் கொண்டக்கருப்பனின் கொலை தான் ஒரே பேச்சாக இருந்தது. கண்ணப்பன் யாரிடமும் இதைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. கொலை செய்தது வாத்தியார் மகனின் ஆட்கள்தான் என்றும், இல்லை எரசனம்பளத்து ராமசாமின் ஆட்கள் தான் என்றும் பேசிக்கொண்டனர்.

நான்கு நாட்கள் கடந்து விட்டதால் தாளக்கரை சகஜ நிலைக்கு திரும்பியிருந்த்தது. கண்ணப்பன் நிம்மதியற்று இருந்தார். அவர் மனம் அந்த சம்பவத்தையே நினைத்திருந்தது.

மாட்டுக்கு தவிட்டுதண்ணி கட்டிகொண்டிருக்கும்போது தேவியின் பேச்சுக்குரல் கேட்டது.

"வா மாயவ. எங்க மேக்க போயிட்டு வர்ற"

"சாமி சுப்பாத்த கவுன்சிய்ய பாத்துட்டு வரேன் சாமி" கும்ப்பிட்டவாரே பதில் கூறினான் மாயவன்.

மாயவனின் குரலை கேட்டதும் கண்ணப்பனின் இதயம் ஒரு விநாடி நின்று துடித்தது.

கண்ணப்பன் கட்டுதாரையிளியிருந்து வீட்டுக்கு செல்லவும் மாயவன் வந்து சேரவும் சரியாக இருந்தது.

"சாமி." கண்ணப்பனை பார்த்து கும்பிட்டான் மாயவன்.

"மாயவன் எப்படியோ கொண்டக்கருப்பன் போய் சேந்துட்டான்." என்று பேச்சை ஆரம்பித்தார் தேவி.

"ஆமுகசாமி, யாரோ செஞ்சு போட்டணுக சாமி. கோழிகூபிட நேரத்தில் அவன் ராமன் காட்டு தடத்துல மேக்க வந்துருக்கான் சாமி"

"எவன் போட்டு குத்தி கொண்டுபுட்டாணுக சாமி." நின்று கொண்டே பதில் கூறினான்.

"நீயெங்க அன்னைக்கு ஊர்லதான் இருந்தையா." கண்ணப்பன் அவன் கண்களையே பார்த்துக்கேட்டார்.

"இல்லசாமி. நான் மணலுக்கு மொய்யானம்படுவ போய்ட்டேன் சாமி. டாங்கி மேடு வந்தேன், அந்த ஆர்டியோ வந்து வண்டிய புடிச்சுக்கிட்டான் சாமி. வண்டிய ஆபீசிக்கு ஓடிக்கிட்டு வர சொல்லிட்டான் சாமி."

"அப்பறம் காலைலதான் வந்தேன் சாமி."

"வண்டிய வெளியே எடுக்கத்தான் மேக்கால கவுண்டிச்சிகிட்ட பணம் கேட்டுட்டு வரேன் சாமி" என்றான்.

கண்ணப்பன் அவன் பதிலை வாங்கிக்கொள்ளவே இல்லை. அவன் கண்களையே பார்த்துகொண்டிருந்தார்.

"எப்படியோ இனி உனக்கு தொல்லை இருக்காது. வண்டிய வண்டிய குருக்காட்டி தொள்ளபண்ட மாட்டான்." தேவி சொன்னார் காப்பியை ஆத்தியவரே.

"ஆமுகசாமி. நம்மள புடிச்சு தொள்ளபண்டுவான் சாமி." என்று சொன்னான் காப்பியை கையில் வாங்கியவரே.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தெக்காலச்சாலை ஆத்தா கையில் தடியை ஊனியவாரே வந்தார்.

"என்ன மாயவா இந்தபக்கம்?"

"சாமி." கும்பிட்டான் மாயவன்.

"சாமி மணல் வண்டி ஆர்டியோ ஆபீஸ்ல மாடிகிடுச்சு சாமி. வெளிய எடுக்க பத்தாயிரம் ஆகும் சாமி. சுப்பாத கவுன்சிய பாத்துட்டு வரேன் சாமி."

எல்லாருக்கும் லட்டு கொண்டுவந்து கொடுத்தார் தேவி.

"அட உக்காந்து சாப்புடு. நின்னு கிட்டே இருக்கற."

"பரவாயில்ல சாமி."

மாயவன் அந்த லட்டை சாப்பிடவே இல்லை. அதை கவனித்த தேவி, "ஏன் மாயவ, அட அத சாப்பிடு" என்றார் .

"இல்லசாமி சிறுசு இனிப்புனா நல்லா தின்பான் அதான் சாமி. " சொல்லிகொண்டே அதைவைக்க காகிதம் தேடினான்

மாயவனுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு இரண்டு வயது. மற்றொண்டு கைக்குழந்தை.

வீட்டுக்குள் சென்ற தேவி மேலும் இரண்டு லட்டுகளை மாயவன் கையில் கொடுத்தவர்,

"இத ஊட்டுக்கு கொண்டுபோ. கையில இருக்கறத சாப்பிடு" என்றார்.

அவன் அதையும் வாங்கி இடுப்பில் கட்டியிருந்த துண்டில் மடித்துகொண்டான்.

மாயவன் கிளம்பி வெகுநேரம் ஆகியும் கண்ணப்பன் எதுவும் பேசாமல் திண்ணையில் உட்கார்ந்தபடியே இருந்தார்.

தெக்காலச்சாலை ஆத்தா மாயவனைபற்றி கூறிக்கொண்டிருந்தார்.

"இவன் வைத்தில இருக்கும்போதே இவங்கப்பன் செத்து போய்ட்டான். இவங்கம்மா இவன் இக்கதுல வெச்சுகிட்டே கலப்புடுங்க வருவா".

"ரொம்ப நல்லவன் பாவம். அப்பாவி."

அவர் கூறி முடிப்பதற்கு முன்பாகவே தேவி ஆரம்பித்தார்.

"இவன் பொண்டாட்டிய பத்து நாளைக்கு முன்னாடி பாத்தேன். கொண்டக்கருப்பன் தெனூம் ராத்திரி தண்ணிய போட்டு வந்து கதவ தட்ரானு சொல்லி அழுதா."

ஏன் மாயவன் கிட்ட சொல்லவேண்டியது தானேன்னு கேட்டதுக்கு, அது எங்க சாமி போய் கேட்கும். பாவஞ்சாமி அந்த ஆம்பள. சொன்ன பொலம்பும் என்று கூறி அவள் கதறி அழுததாகவும் கூறிக்கொண்டிருந்தார்.

"எப்படியோ அந்த நாய் செத்து தொலஞ்சான். நல்லா இருக்கட்டும். இவன் வெடிய வெடிய மணல் வண்டி ஓட்டறான். பொண்டாட்டி கைக்குழந்தையோடஆடுமேயிக்கறா" என்று கூறியவாறே தெக்காலசாளை ஆத்தா கிளம்பினார்.

கண்ணபனுக்கு "எவன் வீட்டு கதவ எவன்டா தற்றது" என்ற குரல் மட்டும் அவர் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. திடுக்கிட்டவர். மாயவன் சென்ற பாதையே பார்த்தபடி இருந்தார்.

ஆம் கொலை செய்தது மாயவன் தான். ஆளாம்பலத்தார் காட்டில் நின்றது மாயவனின் வண்டி தான். கொண்டக்கருப்பனை குத்திவிட்டு சைக்கிள் எடுத்துக்கொண்டு சென்றதும் மாயவன் தான். வேண்டும் என்றே ஆர்டியோவிடம் மாட்டியிருக்கிறான்.

முகம் வேர்த்து கொட்டியது. சடாரென்று எழுந்து கிழவரத்து தோட்டத்திற்கு நடக்க ஆரம்பித்தார் கண்ணப்பன்.

மனம் செய்வதறியாமல் தவித்தது. மாடுகளை மாத்திகட்டியவர் ஏரியில் ஏறி சாமமேட்டை நோக்கி பார்த்தார்.

மாயவன் தூரத்தில் புளிதி மண் பாதையில் வெறும் காலில்  நடந்து கொண்டிருந்தான். வெயில் அவன் மீது பட்டு வழிந்தோடியது. கால்கள் கானல்நீரை மிதித்தபடி ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

"கண்ணப்பண்ணா" சுப்ரமணியின் குரல் கேட்டது.

"ஏன்பா, என்ன சாமமேட்ல யாரையுமே காணோம். போலீஸ் கீது ஒன்னையும் காணோம்." கண்ணப்பன் கேட்டார்.

"அங்க யாருன்னா இருக்க. ஒரு நாய் இல்ல." பதில் வந்தது.

"யார்னு தெருஞ்சுதா?".

"வாத்தியார் மகனோட ஆளுகதான் சொல்றாங்க. ஆனா கரக்டா யாருன்னு தெரியல."

"போலீஸ் நாய்வருதுனு சொன்னாங்க."

" ஆமாண்ண. நாய எறக்கி உட்டதும் வேலிக்குள்ள சிக்குன நாய் வெளிய வரதுக்குல்லையே பெரும்பாடபோச்சு. புடுச்சு வண்டிக்குல்லையே போட்டுக்கிட்டு போய்ட்டானுங்க." சொல்லிகொண்டே பீடியை பற்றவைத்தார் சுப்ரமணி.

"கூட இருந்தவன்லாம் சும்மா இருப்பானா மணி".

"அட ஏண்ணா, குடும்ப இருக்கிறவனுக்கே, செத்தா கூடி அழ ஆலகாணோம். இவனுக்கு யாருனா இருக்கா".

"அண்ணா ஆடு மசால் காட்டுக்கு போகுது. நான்போய் முடுக்கரேன். மானம் வேற கெலக்க ஏறிக்கிட்டு நிக்கிது" என்றவாரே சுப்ரமணி வேகமாக ஓடினார்.

கண்ணப்பன் ஏரி மீது நடக்க ஆரம்பித்தார். சூரியன் மேற்கே விழ ஆரம்பித்திருந்தது. கொக்குகள் கதிர் அரிவாளின் வளைவைபோல் சீராக சூரியனை கிழித்துக்கொண்டு பறந்தன.

கண்ணப்பன் மீண்டும் மாயவன் சென்ற திசையிலேயே பார்த்தார்.

மாயவன் இன்னும் நடந்துகொண்டிருந்தான். கையில் அந்த மூன்று லட்டு உருண்டைகளை பிடித்தவாரே.

அவன் கையில் இறுக பற்றிக்கொண்டு நடப்பது லட்டு உருண்டைகளை அல்ல. அவன் குடும்பத்தின் மூன்று உயிர்களை.

யோசித்தபடியே பனமரத்து நிழலில் உட்காந்தார்.

"பால் கறக்க நேரமாச்சு. மாட்ட புடிச்சுக்கிட்டு வாங்க" தேவியின் கணீர் குரல் கேட்டது.

எழுந்து மீண்டும் மாயவன் சென்ற திசையில் பார்த்தார்.மாயவன் வெயிலில் கரைந்து மறைந்திருந்தான்.

சாமமேடு மட்டும் காலத்தின் மௌன சாட்சியாக வெயிலை குடித்தவாறே சலனமற்று கிடந்தது. இவரைப்போலவே.

தேவியின் குரல் கேட்டு திடீர் என்று எழுந்தவர் உற்சாகமாக நடக்க ஆரம்பித்தார். மனது லேசாகி இருந்தது. குழப்பங்கள் ஏதுமில்லை. கண்கள் விரிந்தன. நன்றாக பசித்தது.

---

கிழக்கே கீழ்வானில் லேசான இடிச்சத்தம் கேட்டது. கார்மழை பெய்யக்கூடும்.

No comments:

Post a Comment