Saturday, December 6, 2014

இங்கு எதார்த்தங்கள் விற்கப்படும்

சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது அம்மா கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு போலாம்னு கூப்பிட்டாங்க. அங்கு எல்லாமே கிடைக்கும்னும் விலையும் குறைவுனும் சொன்னாங்க. எனக்கு அவங்க சொன்னத கேட்டதும் ஒரே ஆச்சரியம். என்ன நம்ம ஊருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எல்லாம் வந்துடுச்சானு.

எங்கள் ஊர் ஒரு சின்ன டவுன் என்பதால் சின்ன சின்ன மளிகைக்கடைகள்தான் இருக்கும். ஒரு சில வருடங்களுக்கு முன்புதான்  நெல்லைமுத்து போன்றவை கடைவிரிக்க ஆரம்பித்திருந்தன.

நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். முன் வாசலிலேயே இருவர் நின்று வரவேற்றுக்கொண்டிருந்தனர். இது ஒன்றும் நமக்கு புதுசு இல்லையென்றாலும் வந்ததில் பாதி பேர் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்ததாகவே நினைக்கிறேன்.நான்கு மாடி. அனைத்து பொருட்களும் இருந்தன.நிறைய ஆபர்களும் கொடுத்தார்கள். அம்மா வீட்டுக்கு தேவையான தேவையில்லாத எல்லா பொருட்களையும் வாங்கிகொண்டிருந்தார்கங்க. 

நான் சும்மா எல்லா இடங்களையும் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்பொழுது  ஒரு பெண் ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்து எடுத்து பார்த்து கொண்டேயிருந்தார். அவருக்கு பிஸ்கட்டின் விலை அல்லது கலரை சொல்லியோ தான் வாங்கி பழக்கம் என்பது அவரின் முகத்தை பார்த்ததுமே புரிந்தது. கொஞ்சம் வயதானவர். அப்போது அங்கு வந்த கடை ஊழியர் அந்த பெண்ணுக்கு எல்லா பிஸ்கட்களின் விலை மற்ற விபரங்களை விளக்கி சொல்லிகொண்டிருந்தார். அந்த பெண் அந்த கடை ஊழியரையே "உங்களுக்கு புடிச்சத கொடுங்க!" என்றார். உடனே அந்த கடைஊழியர்  லோக்கல் பிரேண்டட் பிஸ்கட்களை ஒரு எண்பது ரூபாய்க்கு கொடுத்தார். உடனே அந்த பெண்ணும் "பேத்திகளுக்கு வாங்கிகிட்டு போறேன்!" என்று சொல்லிவிட்டு மிகுந்த சந்தோசமாக கிளம்பினார். அந்த கடை ஊழியரும் தனது லோக்கல் பிரேண்டட் பிஸ்கட்கள் விற்ற சந்தோசத்தை மற்றொரு ஊழியருடன் பகிர்ந்து கொண்டார் நான் இருப்பதை கவனிக்காமல்.

அந்த லோக்கல் பிரேண்டட் பிஸ்கட்கள் அந்த அம்மாவின் பேத்திகளுக்கு நிச்சயம் பிடிக்கப்போவதில்லை. அந்த அம்மாவிக்கோ ஏமாளி என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும். என் மனதில் தோன்றிய கேள்வி ஒன்றே ஒன்றுதான். அடுத்தமுறை அந்த அம்மா இங்க டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வந்தா  எப்படி இந்த கடை ஊழியர்களை கையாளபோறாங்கனுதான். ஒன்னு இங்க வரவே மாட்டாங்க இல்ல அப்படி வந்தாலும் இங்க யாரு சொல்றதையும் கேட்க  மாட்டாங்க.

இது ஒரு சின்ன எடுதுக்காட்டுதான். இது நாள்வரைக்கும் கடைகாரர்கள் இது போன்று நேரடியாக வாடிக்கையாளர்களை ஏமாற்றியதில்லை.விலை கூடுதலாக சில சமயம் மிகவும் கூடுதலாக கூட இருக்கும். ஆனாலும் கிராமத்து மக்கள் கேட்பதை புரிந்துகொண்டு அவர்களின் பட்ஜெட்டையும் அனுசரித்து வியாபாரம் செய்தனர்.இருவருக்கும் இடையில் பரஸ்பரம் நல்ல நம்பிக்கை இருந்தது.

இந்த ஷாபிங் மால்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை எல்லாவற்றையும்  தேவையற்றதாகிவிட்டது. இனி இந்த நம்பிக்கைகள். காலாவதியாகிவிடும். கிராமத்து வெள்ளந்தி மனிதர்களும் தொலைந்துபோய் விடுவார்கள்.சுயநலம் மட்டுமே குறிக்கோள்.

டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களும் மால்களும் தவிர்க்கமுடியாததுதான். ஆனாலும் இன்னும் கொஞ்சக்கலாமாவது இவற்றை தவிர்க்கலாம். மீதமிறுகின்ற  அப்பாவி கிராமத்து மனிதர்களும் சுயநலவாதிகளா மாறும்வரை.  

சிறு குறு வியாபாரிகள் யாரும் இனி காலம் தள்ள முடியாது. மறைமுகமாக லோக்கல் மார்க்கெட்மூலகமாக இருந்த பண்ட மாற்று முறையும் இனி இருக்காது. ஒரு ஊரில் தக்காளி கூடைகூடையாக ஏற்றுமதி செய்யப்படும் மறுபுறம் அதே ஊரில் கடைகளில் தக்காளி தட்டுப்பாடும் இருக்கும்.

அம்மா கூப்பிட்டு எல்லா பொருளையும் சரிபார்க்க சொன்னாங்க. முக்கியமா ஆபர் எதாவது மிஸ் ஆயிருச்சான்னு. "பழைய அரசமரத்து கடக்காரன் எந்த ஆபாரும் கொடுக்கமாட்டான்னு"  திட்டிகிட்டு இருந்தாங்க. 

நான் சின்னப்பையனா அம்மாவோட ஒரு நாள் அந்த அரசமரத்து கடைக்கு போயிருந்தேன். அம்மா துவரம் பருப்பு கேட்டாங்க. கடைக்காரர் "புது பருப்பு வந்துருக்கு ஆனா மைசூர் பருப்பும் கலந்து இருக்குனு சொல்லீட்டு பக்கது கடைலபோய் வாங்கிக்கிட்டுவந்து கொடுத்தாரு".

அந்த அரசமரத்து  கடைகாரரின் சிரிப்பும் நோக்கமும்  இந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஊழியரின் சிரிப்பும் நோக்கமும் வெளித்தோற்றத்தில் ஒன்று போலவே இருந்தாலும் அதன் பின்னால் 40 வருட அரசியல் பொருளாதார கலாச்சார மாற்றம் ஒளிந்திருக்கிறது.

பில் செட்டில் செய்து கிளம்பும்பொழுது  ஸ்விட்ஸ் பலகாரங்கள் விற்கும் இடத்தில ஒரு போர்டு தொங்கிகொண்டிருந்து. அதில் "இங்கு பதார்த்தங்கள் விற்கப்படும்" என்று வாசகம் எழதியிருந்து.

நான் அங்கும் இங்கும் தேடி பார்த்தேன். எங்காவது  "எதார்த்தங்கள் விற்கப்படும்" என்ற வாசகம் தென்படுகிறதா என்று.

No comments:

Post a Comment