Monday, December 8, 2014

பசித்திருக்கும் புலி

அவர்கள் பந்திபூர் வந்து இறங்கியபொழுது நல்ல குளிர். பனிக்காலம் என்பதால் மணி ஆறு ஆகியும் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. சரவணனும் அசோக் சாரும் தம் பற்றவைக்க ஆரம்பித்தனர்.

ராம் இரு கைகளையும் இறுக்கமாகக்கட்டி நின்று கொண்டிருந்தான். குளிரின் நடுக்கத்தில் அவன் உதடுகள் துடித்தன. மூடுபனி அவனை போர்வைபோல் போர்த்தி இருந்தது.

பந்திபூர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் நீட்சி. அடர்ந்த வனம். புலிகள் சிறுத்தைகள் யானைகள் அதிகம் வசிக்கும் பகுதி. வனத்துறையின் சார்பில் தினமும் இருமுறை சபாரி அழைத்துச்செல்கிறார்கள். வார இறுதி என்பதால் சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது.

6:15 மணிக்கெல்லாம் சபாரி கிளம்பியது. எந்த விலங்கும் கண்ணில் தென்படவில்லை. ஒரு இடத்தில் வண்டி நின்று ஒரு சிலர் மட்டும் இறங்கி  காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஓட்டுனரின் வாக்கி டாக்கி ஒலித்தது. புலி  ஒன்று பசியுடன் அலைவதாகவும் அது மனித மாமிசத்தை உண்ணக்கூடியது  எனவும் வனத்துறை அதிகாரி எச்சரிதுக்கொண்டிருந்தார்.

வண்டி கிளம்ப தயாரானது. அனைவரும் ஏறினர். அசோக்சார் மட்டும் பேன்ட் ஜிப்பை பாதி போட்டும் போடாமலும் சரவணன் கைகொடுக்க கஷ்டப்பட்டு ஏறி உட்கார்ந்தபோது தான் அவரின் பேன்ட் கிழிந்திருந்தது தெரிந்தது. அவரின் இடது தொடைப்பகுதி நனைந்து இருந்ததை யாரும் கவனிக்கவில்லை சரவணனை தவிர.

எப்படியாவது அந்த புலி கண்ணில் மாட்டவேண்டும் என்று இராமச்சந்திரன் வேண்டிக்கொண்டே அனைத்து பக்கங்களிலும் தனது பார்வையை விரித்தபடி இருந்தான்.

சற்றென்று வண்டி நின்றது. ஓட்டுனர் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார். அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த புலி ஒரு மரத்தின் கிளையில். கொஞ்சம் பரபரப்பாகவே அதே சமயம் மிகுந்த பசியுடன் இருப்பது அதன் வயிற்றுபகுதியின் துடிப்பிலேயே தெரிந்தது.

போட்டோ கிளிக்குகளின் சத்தம் இடைவிடாமல் கேட்டது. ராம் ஐந்தாறு போட்டோக்கள் எடுத்தான். க்ளோசப் சாட் எடுப்பதற்கு ஜூம் செய்தபோது புலியின் கண்கள் பளீரென மின்னின. இவனும் பலமுறை புலிகளை பார்த்திருக்கிறான். ஆனால் அதன் கண்களை இவ்வளவு நெருக்கமாக கண்டதில்லை. 

அதன் கண்களில் பசியும் கோபமும் சோகமும்  மாறிமாறி வந்து போனது. இவன் கைகள் கேமரா பட்டனை அமுக்கவில்லை. புலியின்  கண்கள் இவனிடம் ஏதோ சொல்லவருவது போலவே தோன்றியது. அதையே பார்த்துகொண்டிருந்தான்.

 இவ்வளவு காலமும் எல்லாரையும் போலவே புலியின் கண்களில் வீரமும் யாரையும் சட்டை செய்யாத ஒரு தெனாவெட்டும் காமும் மட்டுமே தான் இருக்கும் என நம்பியிருந்தான. இல்லை அது உண்மையில்லை.

உண்மையில் அதன் கண்கள் நம்மிடம் பிச்சை கேட்கிறது. வாழவிடும்படி மன்றாடுகிறது. எஞ்சிருக்கும் அதன் சந்ததியை காப்பாற்ற கண்ணீர் வடிக்கிறது. நூறுவருடங்களுக்கு முன்பு இருந்த எந்த சந்தோசமும் வீரமும் மகிழ்ச்சியும் அதனிடம் இல்லை. ஒரு அகதியைபோல அள்ளாடுகிறது. மனிதர்கள் சொல்லும் புலியைப்பற்றிய வர்ணனைகள் முக்கால்வாசி கற்பனையே.

புலி மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது. வண்டி கிளம்பியது. வரும் வழியில் சபாரி வண்டி செல்லும் பாதையை ஒரு மான் கூட்டம் கடந்து சென்றது. அதன் ஒய்யாரமான நடையை தமது கேமரா கண்களில் ரசிதுக்கொண்டிருன்தனர். ராமும் அதை தனது கேமராவில் படம்பிடித்துக்கொண்டான். இருந்தாலும் அவன் மனம் புலியின் நினைவாகவே இருந்தது.

அவர்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பியிருந்தபொழுது மணி பனிரெண்டாகியிருந்தது. வெயில் ஏறியிருந்தது. செல்போனை எடுத்தபொழுது அம்மாவின் மிஸ்டுகால்கள் கண்ணில் பட்டன. திருப்பி அழைத்தபொழுது அம்மா வழக்கமான விசாரிப்புகளை தாண்டி கல்யாண விசயத்திற்கு வந்தார். காங்கேயத்திலிருந்து புதிய இடம் வந்திருப்பதாகவும் அவர்கள் சரி என்று சொல்லிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். இவன் மனம் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை. புலியின் பசித்த கண்கள்  மட்டுமே நினைவில் வந்துவந்து போயின. 

மதிய உணவு ஹாலில் சரவணன் தனது பழைய அனுபவங்களைப்பற்றி எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். ஒரு சிலர் போட்டோக்களை எடிட் செய்துகொண்டும்  பேஸ்புக்கில் ஏற்றிக்கொண்டும் இருந்தனர். மீதிப்பேர் பீரும் சிகரட்டுமாக இருந்தனர். ராம் தான் எடுத்த  போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தான்.

அசோக் சார் ஒரு கையில் வோட்காவும் லேப்டாப்மாக வந்தார். சரவணனும் சாப்பிட தயாரானார். ராமின் லேப்டாபில் இருந்த மான் கூட்டத்தின் போட்டோவை பார்த்து, "எவ்வளவு அழகாக இருக்கு. எப்டி ரோட்ட கிராஸ் பண்ணுது பாருங்க" என்றார் அசோக் சார். சரவணன் மான்களை பற்றியும் அதன் வகைகளை பற்றியும் கூற ஆரம்பித்தார். ராம் மனதிற்குள் புன்னகைதுக்கொண்டான். யார் பாதையில் யார் செல்வது. காடு மானின் வாழ்விடம்.அது நமக்கானதல்ல.


ஒரு ரவுண்டு முடிந்திருந்தது. அசோக் சார் தனது பால்ய காதல் கதைகளை கூற ஆரம்பித்தார். பல முறை கேட்ட கதைதான் என்றாலும் ராமுக்கும் சரவணனுக்கும் வேறு வழியில்லை.

ராம் தன்முன் இருந்த வோட்க கிளாசில் ஐஸ்கியுபுகளை மிதக்கவிட்டான். ஐஸ் கட்டிகள் மின்னின. புலியின் கண்களை போலவே. மெதுவாக வோட்காவில் கரையத்தொடங்கின. 

இன்னும் சிறிது நேரத்தில் ஐஸ்கட்டிகள் கரைந்துபோகும். புலிகளும் அப்படியே. சிறிது காலத்தில் மறைந்து போகக்கூடும்.

ராமின் கண்கள் பனித்திருந்தன. அடுத்த ரவுண்டில் அதுவும் கடந்து போகும்.

1 comment:

  1. எப்படியோ ராமச்சந்திரன் கல்யாணத்துக்கு ஆப்பு வச்சாச்சு :)

    ReplyDelete